புலாவ்களில் பல வகை உண்டு, அதில் நாம் இங்கு காண இருப்பது பன்னீர் புலாவ். பொதுவாக பன்னீர் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. இன்னும் சொல்ல போனால் பன்னீர்க்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. அந்த வகையில் புலாவ்வும் உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு வகை. அதனாலேயே பன்னீர் புலாவ்வுக்கு உணவு பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி செய்கிறார்கள். அதற்கேற்றவாரே வெவ்வேறு நாடுகளில் இவை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பன்னீர் புலாவ்யின் ஸ்பெஷல் என்னவென்றால் பிரியாணி போன்றோ அல்லது மற்ற சிறப்பு உணவுகள் போன்றோ இதை செய்வதற்கு கடினமாகவோ அல்லது அதிக நேரமோ பிடிக்காது. சமைக்க ஆரம்பிப்பவர்கள் கூட இதை மிக எளிதாக செய்துவிட முடியும். மேலும் பன்னீர் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதினாலும் மற்றும் இதில் பல காய்கறிகளை நாம் சேர்ப்பதினாலும் இதை நாம் குழந்தைகளுக்கு எந்த பயமுமின்றி செய்து கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல ஒரு அசத்தலான மதிய உணவு.
இப்பொழுது கீழே பன்னீர் புலாவ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பன்னீர் புலாவ்
தேவையான பொருட்கள்
- 1 கப் பாசுமதி அரிசி
- 200 கிராம் பன்னீர்
- 2 பெரிய வெங்காயம்
- 1/2 கப் கேரட்
- 1/2 கப் பீன்ஸ்
- 1/2 கப் பச்சை பட்டாணி
- 3 பச்சை மிளகாய்
- 1 பட்டை துண்டு
- 3 ஏலக்காய்
- 3 கிராம்பு
- 1 பிரியாணி இலை
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு புதினா
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி அதை அரை மணி நேரம் வரை ஊற விடவும். பின்பு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, மற்றும் பன்னீரை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- நெய் சுட்டதும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் சீரகத்தை சேர்த்து வறுக்கவும்.
- இவை வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பச்சை மிளகாயை கீறி போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை வதக்கவும்.
- அடுத்து இதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு புதினா, சிறிதளவு கொத்தமல்லி, மற்றும் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்பு ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி இதில் சேர்த்து பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கலந்து விடவும்.
- அரிசியை கலந்து விட்ட பின் அதில் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சரியாக ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும்.
- ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே சுமார் 5 நிமிடம் வரை அடுப்பிலே வைத்திருக்கவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து பன்னீர் புலாவ்வை எடுத்து சுட சுட ஒரு தட்டில் வைத்து அதை ரைத்தா உடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பன்னீர் புலாவ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
You can find thePaneer Pulao recipe in English here.