மிக்ஸர் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் இவை மக்களுக்கு மிகவும் விருப்பமான மாலை நேர சிற்றுண்டியாக திகழ்கிறது. மேலும் இவை தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய உணவும் கூட ஏனென்றால் மணப்பெண்ணின் சீர்வரிசை பாத்திரங்களில் இனிப்பு மற்றும் கார உணவுகளை கொடுத்து அனுப்புவது வழக்கம். அந்த கார உணவுகளில் மிக்ஸர் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். அதே போல காபி அல்லது டீயோடு ஒரு கிண்ணம் மிக்ஸரை சேர்த்து உண்ணும் காம்பினேஷன் தனி தான் என்றால் அது மிகையல்ல. இதனின் அதீத வரவேற்பிற்கு இதனின் மொறு மொறுப்பான தன்மை மற்றும் அசத்தலான சுவை காரணமாக இருக்கிறது.
இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை இன்று இந்திய மக்கள் குடியேறியுள்ள அனைத்து நாடுகளிலும் பிரபலம் அடைந்து இருக்கிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் மிக்ஸர் என அழைக்கப்படும் இவை, மும்பையில் Bombay mix என்றும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருக்கும் இந்திய உணவகங்களில் London mix என்றும், ஆப்கானிஸ்தானில் simian என்றும், மியான்மரில் sarkalay chee என்றும், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் kacangputih என்றும், வங்கதேசத்தில் Chanachur என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக நம் மக்கள் கடைகளில் கிடைக்கும் மிக்ஸர் பாக்கெட்டுகளை வாங்கி வீட்டில் வைத்து மாலை நேரங்களில் சுவைப்பது தான் வழக்கம். ஆனால் பலருக்கும் தெரியாது இதை நம் வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம் என்று. மிக்ஸர் செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்து விட்டால் போதும் குறைந்த நேரத்திலேயே அனைத்தையும் பொரித்து எடுத்து ஒன்றாக கலந்து விட வேண்டியதுதான்.
இப்பொழுது கீழே மிக்ஸர் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மிக்ஸர்
தேவையான பொருட்கள்
- 2 கப் கடலை மாவு
- ½ கப் அரிசி மாவு
- ½ கப் பொட்டுக்கடலை
- ½ கப் வேர்கடலை
- ½ கப் முந்திரி
- ½ கப் அவுல்
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- ½ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- 1 சிட்டிகை பேக்கிங் சோடா
- 4 - 6 பூண்டு
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் அளவு கடலை மாவு, கால் கப் அளவு அரிசி மாவு, அரை மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதை சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற விடவும். (தண்ணீரை கவனமாக சேர்க்க வேண்டும் அதிகமாக சேர்த்து விட்டால் மாவு தண்ணியாக ஆகி விடும்.)
- இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் ஒரு கப் அளவு கடலை மாவு, கால் கப் அளவு அரிசி மாவு, சிறிதளவு பெருங்காய தூள், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- அடுத்த ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காராபூந்தியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் ஜவ்வரிசி கரண்டியை எடுத்து எண்ணெய்யின் மேல் வைத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஊற்றி அதை நன்கு தேய்த்து விடவும்.
- பிறகு காராபூந்தி ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
- இவ்வாறே மீதமுள்ள மாவையும் செய்து காராபூந்தியை பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- காராபூந்தியை பொரித்து எடுத்த பின் நாம் செய்து வைத்திருக்கும் ஓம பொடி மாவை எடுத்து ஒரு இடியாப்ப அச்சில் வைத்து அதை கடாயில் இருக்கும் எண்ணெய்யில் சுத்தி பிழிந்து விடவும்.
- அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கம்பியின் மூலமாக அல்லது skewer யின் மூலம் பக்குவமாக திருப்பி போட்டு சிறிது நேரம் வேக விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு ஆறிய பின் அதை பக்குவமாக கைகளின் மூலம் நொறுக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, மற்றும் அவுலை ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனியாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு பூண்டு மற்றும் கருவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் அனைத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒன்றாக சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு பெருங்காய தூளை போட்டு நன்கு கலந்து விட்டு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் மிக்ஸர் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.