இடியாப்பம் தமிழர்களின் ஒரு பாரம்பரியமான உணவு வகை. இவை தமிழகத்தில் ஒன்றாம் நூற்றாண்டின் போதே தமிழர்களின் சமையல் முறையில் இருந்துள்ளதாக சங்க இலக்கியத்தில் சில குறிப்புகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவை தமிழர்கள் இடம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பிரபலமடைந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் string hopper என்று அழைக்கப்படும் இடியாப்பம், மலேசியாவில் பேசப்படும் மலாய் மொழியில் putu mayam என்றும், மற்றும் இந்தோனேசிய மொழியில்putu mayang என்றும் அழைக்கிறார்கள்.
உடம்பு சரியில்லாதவர்களுக்கு மருத்துவர்களே இடியாப்பத்தை சர்க்கரையுடனோ அல்லது தேங்காய் பாலுடனோ சேர்த்து உண்ண பரிந்துரைப்பது வழக்கம். ஏனெனில் இடியாப்பம் வயிற்றுக்கு உகந்தது. மேலும் தேங்காய் பால் உடம்புக்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதற்கு வயிற்று புண்ணை ஆற்றும் தன்மையுண்டு. அதனாலேயே இவை பெரும்பாலும் தேங்காய் பாலுடன் தான் பரிமாறப்படுகிறது. இருப்பினும் வெஜிடபிள் குருமா, காலிஃப்ளவர் குருமா, ஆட்டு கால் பாயா, அல்லது சிக்கன் குருமாவும் இடியாப்பத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.
இப்போது இருக்கும் இயந்திரமயமான உலகில் இன்ஸ்டன்ட் ஆக கடைகளில் கிடைக்கும் மாவுகளுக்கு வரவேற்பு கூடி விட்டது. அந்த வகையில் பெரும்பாலானோர் நாம் இடியாப்பம் செய்ய பயன்படுத்தும் பச்சரிசி மாவையும் கடையிலேயே வாங்குகிறார்கள். ஆனால் இதை அதிக வேலையின்றி வீட்டிலேயே வெகு சுலபமாக தயார் செய்து விடலாம்.
ஒரு கிலோ பச்சரிசியை வாங்கி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி ஒரு துணியை விரித்து இந்த அரிசியை அதில் உலர்த்தி காய விட்டு பின்பு அதை மிஷினில் கொடுத்து அரைத்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால். அடுத்த 20 நாட்கள் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் பச்சரிசி மாவை விட இந்த மாவில் இடியாப்பம் மிருதுவாக வரும். மேலும் இவை உடம்புக்கும் எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது.
இப்பொழுது கீழே இடியாப்பம் தேங்காய் பால் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
இடியாப்பம் தேங்காய் பால்
Ingredients
- 1 கப் பச்சரிசி மாவு
- 1/2 கப் தேங்காய்
- 1/2 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- சர்க்கரை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
Instructions
- முதலில் ஒரு கப் அளவு பச்சரிசி மாவை எடுத்து ஒரு bowl ல் போட்டு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் 4 அல்லது 5 சொட்டு எண்ணெய் விட்டு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்ததும் அதை எடுத்து bowl ல் இருக்கும் மாவில் சிறிது சிறிதாக ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் நன்கு பிரட்டி சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
- மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் அதை அப்படியே சுமார் 10 நிமிடம் வரை வைக்கவும்.
- இப்பொழுது இடியாப்பத்தை பிழிந்து வைப்பதற்கு இடியாப்ப தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி தயார் செய்து கொள்ளவும்.
- இடியாப்ப தட்டு இல்லாதவர்கள் நாம் வழக்கமாக இட்லி ஊற்றி வைக்கும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அடுத்து இடியாப்ப அச்சை எடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை உருட்டி அச்சின் அளவிற்கேற்ப உள்ளே வைத்து அவரவர் விருப்பத்திற்கேற்ற கணத்தில் இடியாப்பத்தை பிழிந்து விடவும்.
- பின்பு இட்லி பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க விடவும்.
- சரியாக தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது இடியாப்பத்தை பிழிந்து வைத்திருக்கும் தட்டுகளை அதன் உள்ளே வைத்து சரியாக சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு பக்குவமாக இடியாப்பங்களை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது தேங்காய் பால் செய்வதற்கு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து இந்த அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டி மூலம் அதிலிருக்கும் தேங்காய் பாலை பிரித்தெடுத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- பின்பு இடியாப்பத்தை ஒரு தட்டில் வைத்து இந்த தேங்காய் பாலை ஊற்றி பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் உடம்புக்கு மிகவும் நன்மையான இடியாப்பம் தேங்காய் பால் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
You can findIdiyappam Recipe in English by clicking here.