ஓமப்பொடி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை மத்திய பிரதேச மாநிலத்தில் உதயமாகி பின்பு மெல்ல மெல்ல இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. மாலை நேரங்களில் பெரும்பாலான பேக்கரிகளில் ஓம்ப்பொடி செய்வதை நாம் காணலாம். என்னதான் மற்ற மாலை நேர சிற்றுண்டிகளை மக்கள் சுவைத்தாலும் ஓமப்பொடிக்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
ஓமப்பொடியை பொதுவாக மக்கள் வெறுமனே ஒரு மாலை நேர சிற்றுண்டியாக காப்பி அல்லது டீ யுடன் உண்கிறார்கள். இது இல்லாமல் ஓமப்பொடி, பேல் பூரி மற்றும் சேவ் பூரி செய்வதற்கு ஒரு முக்கியமான மூலப்பொருளாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பேல் பூரி மற்றும் சேவ் பூரியின் சுவைக்கு ஓமப்பொடி தான் காரணம் என்றால் அது மிகையாகாது. இது மட்டுமின்றி ஏறத்தாழ வட இந்தியாவில் செய்யப்படும் அனைத்து விதமான chat களுக்கும் ஓமப்பொடியை பயன்படுத்துகிறார்கள்.
ஓமப்பொடியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமும் இன்றி நம் வீட்டிலேயே செய்து விடலாம். இதை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. மேலும் இதை ஒரு முறை செய்து மொறு மொறுப்பாக இருக்கும் போதே ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு விட்டால் இதை நாம் சுமார் மூன்று வாரங்கள் வரை வைத்து உண்ணலாம். அதனால் நாம் ஓமப்பொடியை செய்த மறு நாளோ அல்லது அடுத்த வாரமோ நாம் பேல் பூரி அல்லது சேவ் பூரியை வெகு எளிதாக நம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இப்பொழுது கீழே ஓமப்பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
ஓமப்பொடி
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை மாவு
- ¼ கப் அரிசி மாவு
- 5 பூண்டு பல்
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி ஓமம்
- 1 சிட்டிகை பெருங்காய தூள்
- 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் ஒரு மேஜைக்கரண்டி அளவு ஓமத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை ஒரு முறை நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து கொள்ளவும். (ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
- அடுத்து அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காய தூள், வெண்ணெய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கைகளின் மூலம் கலந்து விடவும்.
- பிறகு வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் ஓம தண்ணீரை இதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அதை மிருதுவான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பின்னர் இடியாப்ப அச்சை எடுத்து அதன் உள் புறங்களில் நன்கு எண்ணெய்யை தடவி பின்பு நாம் செய்து வைத்திருக்கும் மாவை அதில் வைத்து மூடி அதை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த ஓமப்பொடியை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் கடாயின் மேலே இடியாப்ப அச்சை வைத்து மாவை பக்குவமாக எண்ணெய்யில் பிழிந்து விடவும். (மாவை எண்ணெய்யில் பிழிந்து விடும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம், மாவை நன்கு எண்ணெய் மேலே தூக்கி வைத்து பிழியவும்.)
- அது ஒரு புறம் நன்கு பொரிந்ததும் அதை மறு புறம் திருப்பி போட்டு வேக விட்டு அது நன்கு வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பரை விரித்து அதில் வைத்து எண்ணெய்யை வடிய விடவும்.
- இவ்வாறே மீதமுள்ள மாவையும் எண்ணெய்யில் பிழிந்து விட்டு அதை பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்பு அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சிறிது சூடாக இருக்கும் போதே அதில் ஒரு கை அளவு கறிவேப்பிலையை போட்டு அதை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பிறகு அதில் பூண்டையும் போட்டு பொரித்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl ல் நாம் பொரித்து வைத்திருக்கும் ஓமப்பொடியை போட்டு அதை கைகளின் மூலம் நொறுக்கி விட்டு அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் கருவேப்பிலையை கொட்டி அதை நன்கு கலந்து விட்டு சுட சுட ஒரு கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான ஓமப்பொடி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.