பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெங்காய பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது.
இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும் பிரபலம் அடைந்திருக்கிறது. இங்கிலாந்தில் இந்தியர்கள் நடத்தும் உணவகங்களில் Pakoras என்ற பெயரில் அழைக்கப்படும் இவை ஒரு பிரபலமாக இருக்கும் துரித உணவு. தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் bajji என்றும், மகாராஷ்டிராவில் Pakoras என்றும் அழைக்கப்படுகிறது.
வெங்காய பக்கோடாவின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் வெங்காயம், கடலை மாவு, மற்றும் அரிசி மாவு இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். அதனால் இந்த மொறு மொறுப்பான வெங்காய பக்கோடாவை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து மாலை நேரத்தில் ஒரு கப் காபியுடன் சுவையுங்கள்
இப்பொழுது கீழே வெங்காய பக்கோடா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
வெங்காய பக்கோடா
தேவையான பொருட்கள்
- ½ கப் கடலை மாவு
- ¼ கப் அரிசி மாவு
- 3 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 சிட்டிகை பெருங்காய தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்த ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை கைகளின் மூலம் நன்கு பிரித்து விடவும்.
- பின்பு அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
- பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை கொட்டி அதை நன்கு கலந்து விடவும். (இதில் நாம் தண்ணீர் எதுவும் சேர்த்து விட கூடாது.)
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையில் சிறிதளவு தண்ணீரை தெளித்து அதை கடாயின் அளவிற்கேற்ப எடுத்து எண்ணெய்யில் உதிர்த்து விடவும். (மாவில் தண்ணீரை தெளித்து தான் விடவேண்டும் ஊற்றினால் அது பஜ்ஜி மாவு போல் ஆகி விடும்.)
- பக்கோடா கட்டியாக இருப்பதை விரும்புவார்கள் அதை சிறு சிறு கட்டிகளாக எண்ணெய்யில் போடவும்.
- பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறே மீதமுள்ள மாவையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து அதை சுட சுட பரிமாறவும். (தேவைப்பட்டால் மாவை எடுத்து எண்ணெய்யில் போடுவதற்கு முன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும்.)
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் வெங்காய பக்கோடா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.