பொங்கலில் பலவகை உண்டு. அதில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல், மற்றும் புளி பொங்கல் குறிப்பிடத்தக்கது. அதில் இன்று நாம் இங்கு காண இருப்பது வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரியமான ஒரு உணவு வகை. இதை பெரும்பாலும் விசேஷ நாட்களில் அவரவர் வீடுகளில் மக்கள் காலை நேர டிஃபனாக செய்து உண்கிறார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகையன்று வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் கட்டாயம் தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் இல்லங்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியோடு சேர்த்துதான் பரிமாற படுகிறது. வெண்பொங்கலோடு மெது வடை காம்பினேஷன் தென்னிந்தியா முழுவதும்படு ஃபேமஸ். இந்த காம்பினேஷன்க்கு என்று ஒரு தனி கூட்டம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், மற்றும் கர்நாடகாவில் உண்டு.
இப்பொழுது கீழே வெண்பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 1/2 கப் பாசி பருப்பு
- 1/4 கப் பால்
- 1/4 கப் நெய்
- 2 பச்சை மிளகாய்
- 1 இஞ்சி துண்டு
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 10 to 12 முந்திரி
- 1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். இஞ்சியை தட்டி, பச்சை மிளகாய், மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசி பருப்பை போட்டு அதனின் பச்சை வாசனை போய் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
- பின்பு அதை நன்கு கழுவி தண்ணீரில் சுமார் கால் மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- கால் மணி நேரத்திற்குப் பின் ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்திருக்கும் பச்சரிசி, மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி சேர்த்து கொள்ளவும்.
- அடுத்து அதில் கால் கப் அளவு பால் சேர்த்து மூடி போட்டு சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும். அப்போது தான் பொங்கல் நன்கு குழைந்து வரும். (பொங்கல் குழைந்த பதத்தில் இருப்பதை விரும்பாதவர்கள் 2 விசில் வந்ததுமே இறக்கி விடவும்.)
- 3 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். (அடியில் தண்ணீர் இருந்தால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை பொங்கலை கிண்டி விடவும்.)
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி மிளகு, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் இஞ்சி, முந்திரி, மற்றும் பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும்.
- சிறிது நேரம் வதக்கியதும் அதை இறக்கும் முன்பு சிறிதளவு கருவேப்பிலையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
- இப்பொழுது இதை குக்கரில் இருக்கும் பொங்கலில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
- பின்பு மீதமுள்ள நெய்யை ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெண்பொங்கல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
1 comment
Sounds great and test best on the occasion of ‘Pongal’,
I shared your post link on blog on Pongal wishes, Thank you!