நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கு பொரியலும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்கிழங்கு பொரியலை கட்டாயம் விரும்பி உண்பார்கள். குறிப்பாக குழந்தைகள். இன்று இங்கு நாம் காண இருப்பது நாம் வழக்கமாக செய்யும் உருளைக்கிழங்கு பொரியலிலிருந்து சிறு சிறு மாற்றங்களோடு செய்யப்படும் ஒரு வித்தியாசமான உருளைக்கிழங்கு பொரியல்.
இப்பொழுது கீழே உருளைக்கிழங்கு பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
உருளைக்கிழங்கு பொரியல்
தேவையான பொருட்கள்
- 3 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 3 பல் பூண்டு
- 2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்
- ¼ மேஜைக்கரண்டி சாம்பார் தூள்
- ½ மேஜைக்கரண்டி மல்லி தூள்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- ½ மேஜைக்கரண்டி கடுகு
- ½ மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு மிளகாய் தூள்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, இஞ்சி பூண்டை தட்டி, மற்றும் தேங்காயை துருவி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
- 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகு, கடலை பருப்பு, மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதை கடுகு வெடிக்கும் வரை வறுக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், சாம்பார் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை அதை வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் நாம் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.