புளியோதரை தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. புளியோதரைக்கு என ஒரு உணவு பிரியர்கள் கூட்டமே இருக்கும் என்றால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக கோவில் புளியோதரைக்கு இருக்கும் மவுசே தனி தான். இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் கோவிலுக்கு எவ்வாறு சுவாமியை தரிசிக்க ஒரு கூட்டம் செல்கிறதோ அது போன்றே அங்கே வழங்கப்படும் புளியோதரையை உண்பதற்கு என்றே ஒரு கூட்டம் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்குகிறார்கள். இன்று நாம் இங்கு காண இருப்பது பெரும்பாலானோருக்கு பிடித்தமான கோவில் புளியோதரை.
கோவில் புளியோதரை நாம் வீட்டில் வழக்கமாக செய்யும் புளியோதரையை விட சிறிது மாறுபட்டது. கோவில் புளியோதரையில் வெறும் வெந்தயம் மற்றும் மிளகு மட்டுமே பயன்படுத்தி செய்வார்கள். நாம் வழக்கமாக பயன்படுத்தும் மசாலாப் பொருட்களை தவிர்த்து விடுவார்கள். இது தான் கோவில் புளியோதரையின் ருசிக்கு பின்னால் இருக்கும் ரகசியம். இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதை சுவைக்கும் போது அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் என்பதால் நாம் செய்யும் போது எந்த ஒரு அலுப்பும் தெரியாது.
இப்பொழுது கீழே கோவில் புளியோதரை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கோவில் புளியோதரை
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 3 மேஜைக்கரண்டி வேர்க்கடலை
- பெரிய நெல்லிக்காய் சைஸ் புளி
- 8 to 10 காஞ்ச மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி மல்லி விதை
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 2 மேஜைக்கரண்டி வெந்தயம்
- 1½ மேஜைக்கரண்டி வெள்ளை எள்
- 1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- 1 மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- நெல்லிக்காய் சைஸ் வெல்லம் துண்டு
- தேவையான அளவு நல்லெண்ணெய்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புளியை போட்டு ஊற வைக்கவும்.
- பின்பு பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மல்லி விதை, மிளகு, மற்றும் 4 லிருந்து 6 காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து அதே கடாயில் 1 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் 1 மேஜைக்கரண்டி அளவு உளுத்தம் பருப்பை போட்டு அது சிவக்கும் வரை அதை வறுக்கவும்.
- அது சிவந்ததும் அதில் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு வெந்தயத்தை போட்டு அதையும் சிவக்க வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (வெந்தயத்தை அதிக நேரம் வறுத்து விட கூடாது அது சிவந்தவுடன் அதை சரியாக அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.)
- பின்பு அதே கடாயில் வெள்ளை எள்ளை போட்டு அது சிவக்கும் வரை அதை வறுத்து எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- பிறகு கடைசியாக அந்த கடாயில் சிறிதளவு கருவேப்பிலை போட்டு அதை நன்கு மொறு பொறுப்பான பதத்திற்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற விடவும்.
- அவை ஆறியதும் அவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். (மிக்ஸி ஜாரில் போட்டு அரைப்பதற்கு பதிலாக அம்மிக்கல்லில் போட்டு பொடி செய்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.)
- அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி புளி தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு தாளித்து கடுகு வெடித்தவுடன் அதில் 1 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் 1 மேஜைக்கரண்டி அளவு உளுத்தம் பருப்பை போட்டு அது சிவக்கும் வரை அதை தாளிக்கவும்.
- பருப்பு சிவந்தவுடன் அதில் 4 லிருந்து 6 காய்ந்த மிளகாயை கில்லி அதில் போட்டு தாளிக்கவும்.
- பின்பு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காய தூள், வேர்க்கடலை, மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் தேவையான அளவு கல்லுப்பு மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பிறகு அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி அதனுடன் வெல்லத்தையும் போட்டு அதை நன்கு கலந்து விட்டு வற்ற விடவும்.
- தண்ணீர் நன்கு வற்றியவுடன் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து சுமார் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு இதில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும்.
- இப்பொழுது நாம் செய்து வைத்திருக்கும் சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.
- அடுத்து புளிக்காய்ச்சல் நன்கு வற்றியவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதிலிருந்து சாதத்திற்கு தேவையான அளவு புளி காய்ச்சலை எடுத்து ஊற்றி சாதத்தை நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து தேவையான அளவு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான கோவில் புளியோதரை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.