தக்காளி சாதம் தமிழர்களின் உணவு முறையில் வெகு நீண்ட வரலாற்றை கொண்டவை. இவை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு செய் முறையை பின்பற்றி செய்யப்படுகிறது. பொதுவாக தக்காளி சாதம் உருளைக்கிழங்கு அல்லது அப்பளதோடு தான் பரிமாறப்படுகிறது. இதை பாசுமதி அரிசியைக் கொண்டு செய்யும் பட்சத்தில் இவை வெங்காய ரைத்தா உடனும் பரிமாறப்படுகிறது.
தக்காளி சாதம் வழக்கமான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. அதனால் நாம் வழக்கமாக சாப்பாட்டு அரிசியில் இதை செய்வதற்கு பதிலாக ஒரு சேஞ்சுக்கு பாசுமதி அரிசியை கொண்டு இதை செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது ஆபீஸ்க்கோ கொண்டு செல்லலாம். இரண்டிற்கும் செய்முறையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஆனால் பாசுமதி அரிசியைக் கொண்டு செய்யும் தக்காளி சாதம் சாதா அரிசியை கொண்டு செய்யப்படுகிற தக்காளி சாதத்தை விட அசத்தலாக இருக்கும்.
இப்பொழுது கீழே தக்காளி சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் பாசுமதி அரிசி
- 6 தக்காளி
- 3 பெரிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 4 பூண்டு பல்
- 1 துண்டு இஞ்சி
- 1 மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி உளுந்து
- 1/4 மேஜைக்கரண்டி சோம்பு
- தேவையான அளவு மிளகாய் தூள்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் பாசுமதி அரிசியை எடுத்து நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் கடுகைப் போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுந்து மற்றும் சோம்பை போட்டு உளுந்து சிவக்கும் வரை அதை வதக்கவும்.
- உளுந்து சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் சிறிதளவு கருவேப்பிலை, கொத்தமல்லி, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- அடுத்து அதில் நாம் சாறாக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
- இந்த குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி தண்ணீரை வடி கட்டி இதில் போட்டு பக்குவமாக சாதம் உடையாமல் நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது மூடி போட்டு மிதமான சூட்டில் சுமார் 2 விசில் வரும் வரை இதை வேக விட்டு பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு சுமார் 3 நிமிடம் வரை அடுப்பில் வைத்து பின்பு அடுப்பை அணைக்கவும்.
- பின்னர் மூடியைத் திறந்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய்யை சேர்த்து நன்கு கிளறி சுட சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உருளைக்கிழங்கு பொரியல் உடன் பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான தக்காளி சாதம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.