மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்காயையோ, அல்லது வெண்டைக்காயையோ சேர்த்தும், மற்றும் சில பகுதிகளில் மிளகை சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பூசணிக்காயை சேர்த்து செய்யப்படும் மோர் குழம்பு.
நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. மோர் குழம்பு செய்வதற்கு வெறும் தயிர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். மேலும் மற்ற குழம்புகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் பிடிக்காது.
மோர் குழம்பு செய்வதற்கு முந்தைய நாளில் அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சி பின்பு அதை ஆற விட்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு தயிரை சேர்த்து அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் வைத்து விடவும். மறுநாள் நமக்கு தேவையான தயிர் வீட்டிலேயே தயார் ஆகிவிடும். அவசர காலகட்டங்களில் மோர் குழம்பை வைப்பதாக இருந்தால் தயிரை கடைகளில் நாம் வாங்கி கொள்ளலாம்.
இப்பொழுது கீழே மோர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
- 1 கப் தயிர்
- 1 கப் பூசணிக்காய்
- ½ கப் துருவிய தேங்காய்
- 10 to 15 சின்ன வெங்காயம்
- 2 காஞ்ச மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- ½ இஞ்சி துண்டு
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- ½ மேஜைக்கரண்டி கடுகு
- ½ மேஜைக்கரண்டி வெந்தயம்
- ½ மேஜைக்கரண்டி சீரகம்
- ½ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூசணிக்காய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லி தயார் செய்து, தேங்காயை துருவி, மற்றும் கடலை பருப்பை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை தண்ணீரில் ஊற விடவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பூசணிக்காயை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பூசணிக்காயை போட்டு அதை சிறிது நேரம் வேக விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
- பூசணிக்காயை விரும்பாதவர்கள் மோர் குழம்பை பூசணிக்காய் தவிர்த்து விட்டு அப்படியேவும் செய்யலாம்.
- பின்பு நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், மற்றும் நாம் ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- பிறகு தயிரை மிக்ஸி ஜாரில் ஊற்றி அதை ஒரு சுத்து சுத்தி கொள்ளவும் அல்லது பருப்பு மத்துலேயும் கடைந்து கொள்ளலாம். (தயிரை அரைக்கும் போது தண்ணீர் ஏதும் சேர்த்து விட கூடாது.)
- பின்னர் இந்த அரைத்த தயிரை நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்புடன் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பூசணிக்காயையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயம், மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு அதை வறுக்கவும்.
- பின்பு அதில் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு நன்கு கிளறி விட்டு வெங்காயம் நன்கு வதங்கும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மோர் கலவையை ஊற்றி அதில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 3 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் கலக்கலான மோர் குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.