பிசி பெலே பாத் தென்னிந்தியாவின் ஒரு வகையான சாம்பார் சாதம். இவை பெரும்பாலும் கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு உணவு. பிசி பெலே பாத்தை பெரும்பாலும் அப்பளம், உருளைக்கிழங்கு சிப்ஸ், அல்லது உருளைக்கிழங்கு பொரியலோடு பரிமாறுவது தான் வழக்கம். ஏனெனில் குழைந்து இருக்கும் சுவையான சாதத்திற்கு இவை மேலும் சுவையூட்டும்.
பிசி பெலே பாத் கர்நாடகாவிலுள்ள மைசூர் அரண்மனையில் உதயமாகி மெல்ல மெல்ல தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தது என கூறப்படுகிறது. இதற்கு மாறாக இவை தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேலூர் கோட்டையில் தான் உதயமானது என்றும் கூறப்படுகிறது.
இப்பொழுது கீழே பிசி பெலே பாத் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பிசி பெலே பாத்
Ingredients
- 1 கப் அரிசி
- 1/2 கப் துவரம் பருப்பு
- 2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்
- 8 to 10 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 8 to 10 பீன்ஸ்
- 2 கேரட்
- 3 கத்திரிக்காய்
- 1 உருளைக்கிழங்கு
- 1 கை பச்சை பட்டாணி
- 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1 1/2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 8 to 10 முந்திரி
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி தனியா
- புளி நெல்லிக்காய் சைஸ்
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 மேஜைக்கரண்டி கிராம்பு
- 6 சிவப்பு மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 மேஜைக்கரண்டி கடுகு
- 1/4 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- கருவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
Instructions
- முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து, தேங்காயை துருவி, புளியைக் கரைத்து புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி போட்டு 5 கப் அளவு தண்ணீர் ஊற்றி சரியாக 5 விசில் வரும் வரை வேக விடவும்.
- அரிசி வேகுவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, தனியா, சோம்பு, மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- பின்பு அதில் 4 சிவப்பு மிளகாயை சேர்த்து அது மொறு மொறுப்பான பதம் வரும் வரை வறுத்து பின்பு துருவிய தேங்காயை போட்டு அதன் ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.
- பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் வெந்தயத்தை போட்டு அது நன்கு பொரியும் வரை வதக்கவும்.
- வெந்தயம் பொரிந்ததும் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அது நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு நன்கு கிளறி தேவையான அளவு உப்பு மற்றும் 4 கப் அளவு தண்ணீர் ஊற்றி கிளறி மூடி போட்டு வேக விடவும்.
- இப்பொழுது குக்கரை திறந்து சாதத்தை நன்கு கிளறி மசித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து சாம்பார் பாத்திரத்தைத் திறந்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீர் ஊற்றி அதனின் பச்சை வாசம் போகும் வரை சாம்பாரை கொதிக்க விடவும்.
- பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு மசித்து வைத்திருக்கும் சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதில் பக்குவமாக சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி சுட வைக்கவும்.
- நெய் சுட்டதும் அதில் முந்திரியை போட்டு முந்திரியை பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே pan ல் அடுத்து கடுகைப் போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் 2 சிவப்பு மிளகாய், அரை மேஜைக்கரண்டி அளவு உளுத்தம் பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை, மற்றும் பெருங்காய தூள் சேர்த்து வறுக்கவும்.
- பின்னர் வறுத்த முந்திரி, உளுத்தம் பருப்பு, மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பிஸ்பிலா பாத் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
Sign up for our newsletter
You can find the recipe in English here for Bisi Bele Bath.
1 comment
How to prepare karela (pavakkay) juice?